“கனியைச் சுவைப்பவர்கள் யாரும் வேரின் வியர்வையை உணர்வதில்லை; விரும்புவதில்லை”
அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கும், தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கும் நிறைய காரணிகள் கல்விப்பேதத்தை விதைத்திருந்தாலும் மிக முக்கிய தாழ்வு மனப்பான்மையை அனுகூலமாக்கியது நுனி நாக்கு ஆங்கிலம்தான்.
மேலிருந்து கீழாக சுற்றும் இராட்டினத்தின் அடிப்பகுதியில் நின்று அண்ணாந்து பார்க்கும் அற்பப் பதர்களாவே கிராமக் குழந்தைகளை ஆங்கிலம் ஆக்கிவிட்டது. தன் பிள்ளை சான்றோன் என ஆங்கிலம் கேட்டதால் மகிழும் அப்பாவிப் பெற்றோரின் அறிவீனம் தினம் தினம் மேலோங்கி வருகிறது.
ஒரு சமுதாயம் நல்லதாக, வல்லரசாக ஆவதற்கு 77% பங்கு ஆசிரியரையே சார்ந்ததாகும். ஆனால், தொடக்கப் பள்ளிகளில் 90% ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் என்றாலே அலர்ஜி, பயம், தயக்கம். அவர்கள் என்ன பண்ணுவார்கள்? பன்னிரண்டாம் வகுப்பு வரை இப்போ உள்ள சூழலை விட கீழுள்ள நிலையில் படித்தவர்கள்தானே. ஆங்கில வகுப்பில் சரியான உச்சரிப்பு, முறையான அறிமுகம், வகுப்பறைச் சூழலே ஆங்கிலம் என்று இருந்தால் மட்டுமே ஆசிரியர்களிடம் இறுக்கம் குறையும். புத்தகத்தை மட்டுமே வாசிக்கும் திறனில் உள்ள ஒரு சூழலாசிரியரிடம் மேம்படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வியை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்?
இப்படிப்பட்ட இடர்ப்பாடுள்ள சூழலில், ஒரு இடைநிலை ஆசிரியரின் தன்னம்பிக்கையையும், ஆங்கிலப் போதானா முறையையும் மீட்டெடுப்பதற்காக வந்ததுதான் PHONETIC DVD.
அன்றாடம் வகுப்பறைகளில் அனுபவப்பட்டு, குழந்தைகளுக்காக.... குழந்தைகளாகவே வாழ்ந்தவர்கள் உருவாக்கிய DVD தான் இது. ஏதோ ஏ.சி.அறைகளில் நிதியை சரிக்கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட உபாயம் அல்ல இது.
ஐயப்பன் என்பவரின் வாழ்நாள் தேடல். அவரது வீட்டில் பண்ட, பாத்திரங்களை விட, CHART, பேனா, பென்சில், ஆங்கில வார்த்தைகள் சம்பந்தப்பட்ட பொருள்களே அதிகம். இவரது நெல்லிக்குப்பம் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து வருபவர்தான் திருமதி. இராணி ஆசிரியர் அவர்கள்.
அபார ஆங்கில அறிவு, அசராத உழைப்பு, நிதம் தொலைதூரப்பயணம், ஒருநாள் கூட தாமதம் இல்லாத வருகை, தலைமையாசிரியரின் சொல் தவறா ஆங்கிலச் சொல்லகராதி.
எந்த UNIT எடுக்கச் சொன்னாலும் பதட்டம் இல்லாத பார்வை. குழந்தைகளிடம் பழகும் பக்குவமான பாசம்.
இந்த UNIT – 15 இல் கூட PHONETICS பற்றிய துளி பயம் இல்லை. இயக்குநரின் RE TAKE க்குகளுக்குத்தான் ஏன் சார் இப்படி என்ற அப்பாவித்தனமான கேள்வி உதிர்ப்புகள் மட்டும். ஆங்கிலத்தைப் பார்த்துப் பயப்படாதது இவரது பலம். உச்சரிப்பு முறையில் போதித்தது இவரது வெற்றி.
ஐயப்பன் ஆசிரியரிடம் இணைந்து பணியாற்றுவது இவரது வரம்.
ஒரு பெண்ணாய் அறிவுச் செறிவுடன் வலம் வருதல் இவரது கம்பீரம்.
ஒரு குழந்தை விடாமல், ஆங்கிலம் வாசிக்கச் செய்தது இவரின் ஆத்ம திருப்தி.
கஷ்டப்பட்டோம், துக்கப்பட்டோம், துயரப்பட்டோம் என்று இந்த DVD க்காக ஆயிரம் அனுபவப் பகிர்வுகளைச் சொல்வது, உங்களுக்குப் புலம்பலாகத் தெரியலாம். பிள்ளைக்குக் காய்ச்சல் என்று கலங்கியபடி வந்த டீச்சரிடம் சிரிச்சிக்கிட்டே நடிங்க என்று நிர்ப்பந்தப்படுத்துவதும், பிறந்த நாள் என்று இனிப்பு வழங்கிய ஆசிரியரை சரியாக நடிக்கவில்லை என்று கடிந்து பேசி அழ வைத்ததும் சங்கடமாக நகர்ந்த பதிவுகள்.
கொட்டாவி விட்டால் கூட திட்டு வாங்குவதும், நடிப்பவர் சரியாகப் பேசும் வரை, அசையாமல் முதுகு வலியோடு முனங்காமல் உட்கார்ந்திருப்பதும் தினம் தினம் என்பது தியாகத்தின் தொடர் போராட்டம்.
எல்லாமே, குழந்தைகளுக்காகவும், ஆங்கிலப் பயமுறுத்தலில் மௌனத் தலை குனியும் ஆசிரியர்களுக்காகவும் தான்.
ஆசிரியர்கள் ஜாலியாக இதை மனமுவந்தால் இது JOLLY PHONICS. குழந்தைகளோடு, சேர்ந்துப் படிக்க முற்பட்டால், ஒவ்வொரு நாளும் வகுப்பே ஜாலிதான். மூக்கைப் பிடிக்கிறதும், நாக்கை மடிக்கிறதும், பல்லைக் கடிக்கிறதும் ஒரே கொண்டாட்டம்தான்.
அப்புறம் பாருங்க, பிள்ளைகள் ஆங்கிலம் பேசுறத இங்கிலாந்து இளவரசியே வந்தாலும் தடுக்க முடியாது போங்க.
Video
கனியைச் சுவைக்கும் நாம் வேர்களின் விழுதான இராணி ஆசிரியரைப் பாராட்டாது விடுவது நெஞ்சுறுத்தும் செயலாகும்.
ஒரு COMMENT, SHARE செஞ்சிட்டு அடுத்தப் பதிவுக்கு நகரலாமே....
Comments
Post a Comment